என் கடன் பணி செய்து கிடப்பதே:

venkatramanan
4 min readNov 29, 2018

--

‘கண்ணனின் ஆரமுது’ என்று பொதிகையில் காலை 6:30 முதல் 6:45 வரை 2007 வாக்கில் கீதை சொல்லத்துவங்கியதுதான் வேளுக்குடி கிருஷ்ணன் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாய் பகவத்விஷயங்களை சொல்லத்துவங்கியதன் ஆரம்பம் என்று நினைக்கிறேன். பின்னர் ‘ராமனின் அருளமுதம்’ (வால்மீகி ராமாயணம்), விஜய்யில் மகாபாரதம், விதுரநீதி, ஜெயாவில் ஆழ்வார்கள் அருஅளமுதம் என்று தொடர்ச்சியாக பல புராண விஷயங்களை முடிந்தளவு பெருவாரியான மக்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறார்.

வேளுக்குடியிடம் நான் கவனிக்கும் விஷயங்களை கீழ்க்கண்டவாறுத் தொகுத்துக் கொள்வேன்:

* சமஸ்கிருத வேதத்திலும் தமிழ் வேதமான பிரபந்தத்திலும் அவருக்கிருக்கும் பாண்டித்யம், ஆயிரக்கணக்கான பாடல்களை மனனமாகத் தெரிந்திருக்கும் நினைவுத்திறன்,அவற்றை சொல்லும் விஷயத்தோடு பொருத்தமாக மேற்கோள் கட்டுவதன் relevance

* உபன்யாசத்தின் நடுவே மக்களுக்காக இறங்கி வருவதாக நினைத்துக்கொண்டு அபத்தமான வேடிக்கைகளை செய்யாமல் நியமம் மேற்கொண்ட தலைப்பை விட்டு விலகாமலிருப்பது

* பொதுமக்களில் ‘பல்ஸை’ கூர்மையாகத் தெரிந்து வைத்திருபது. உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன்: அவரது தொலைக்காட்சி உபன்யாசங்களின் இறுதியில் அந்த வாரயிறுதியிலோ அந்த மாதத்திலோ அவரது உபன்யாசம் (நேரில்) நடக்கும் இடம், காலம், நேரம், தலைப்பு போன்றவற்றை (ரயில் நிலையத்திற்கு அருகிலா என்பதெல்லாமும்) ஒரு நிமிடத்திற்கும் குறைவான கால அவகாசத்தில் நேயர்களுக்கு அறிவிக்கப்படும். ஏன் இறுதியில் — ஏனெனில், நிகழ்ச்சியின் துவக்கத்தை தவறவிட்டவர்கள் கூட நிகழ்ச்சி முடியும்போது நிச்சயம் தவறவிடாமல் காண்பர், எனவே இறுதியில் சொன்னால் இன்னும் நிறைய பேரைச் சென்றடையுமென்பதால். அவரிடம் கேட்டால் இதற்கு “‘முதலில் பகவத் விஷயம், அப்புறம்தான் நாம்’ என்று இருந்தால் அது தன்னடையே சரியே அமைந்து விடும்” என்றொரு அருமையான விளக்கம் கிடைக்கும்!

* மேற்சொன்னதன் தொடர்ச்சியாக அவர் கூட்டிச் செல்லும் யாத்திரைகளின் அறிமுகக் காணொளிகளில் அவர் பயணத்திட்டத்தை விவரிக்கும் முறை — சின்னச்சின்னத் தகவல்களையும் பொறுமையாக, கேட்கும் அனைவருக்கும் விளங்கிக் கொள்ளும் வகையில், நமக்கு சந்தேகமே வைக்காமல் அனைத்துக் கேள்விகளையும் அவரே உருவாக்கி விடையளிக்கும் பாங்கு … 2010இல் என் மனைவியின் மாமாவுக்குத் தெரிந்தவர்கள் இருவர் யாத்திரைக்கு பணம் கட்டிப் பின் வர இயலாமல் போக, என் நண்பர்கள் இருவரின் தாயார்கள் வருவதாக முடிவாயிற்று. எனவே என் நண்பனும் அந்தக் காணொளிகளைக் கண்டுவிட்டிருந்தான். அவனுடைய அவதானம் இது — “டே! இவர் கூட்டிட்டுப் போறது எல்லாமே வயசான டிக்கெட்டுங்க, அவங்களுக்கு ஒன்னொன்னைப் பத்தியும் ஆயரத்தெட்டு சந்தேகங்கள் இருக்கும், எப்படிக் கேட்கறதுங்கற தயக்கமும் கூடவே இருக்கும். ஆனா அவரே எல்லாத்தையும் முன்கூட்டியே யோசிச்சு அதற்கான பதில்களை நிதானமா, அழுத்தமா சொல்லிடறாருடா.” இதுதான் அவரின் மிகப்பெரிய பலம்.

* இன்றைய இளஞர்களின் வாழ்க்கை வெகுவேகமாக நகர்மயமாகிக்கொண்டிருக்கிறது, சந்தைப் பொருளாதாரத்தால் நாம் அனைவரும் ஏதோவொரு திசையில் வெகுவேகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதே சமயம் பக்தி தொடர்பான விஷயங்களில் நம் அலட்சியமும் ஏதோவொரு வகையில் நமக்கு உறைத்தே இருக்க, அது குறித்தான ஒரு குற்றவுணர்ச்சியும் நமக்கிருக்கிறது. இந்தக் குற்றவுணர்ச்சியுடன்தான் அவரின் உரையாடல். பௌராணிகர்கள் வழிவழியாகக் கொண்டுவந்து சேர்த்த ஒரு மரபு கண்முன்னே தேய்ந்து போவதை கவலையுடன் அவதானிக்கும் அவர், தன்னால் இயன்றவரையில் சத் விஷயங்களை இந்தத் தலைமுறைக்குக் கற்றுக்கொடுத்து அவர்களை அதற்காகத் தயார் செய்வதை தனக்கான ஸ்வதர்மமாகவே வரித்துக் கொண்டுள்ளார்.

இதற்காகவே வெறும் உபன்யாசங்களோடு நிறுத்தாமல் இன்றைய தலைமுறையின் மாற்றங்களையும் கைகொண்டிருக்கிறார். உதாரணத்திற்கு மாற்றுத்திறனாளிகளுக்கென இரு பள்ளிகளை ஸ்ரீரங்கத்திலும் ஆழ்வார்திருநகரியிலும் நடத்துகிறார். (இடங்களை நினைவிலிருந்து எழுதுகிறேன்). சிறுவர்களுக்கான பிரபந்த சந்தை வகுப்புகளை அவர்களின் குடியிருப்புகளின் அருகிலேயே நடத்துவதற்கு தனக்கிருக்கும் தொடர்பு வலையைப் பயன்படுத்திக்கொள்கிறார். கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக ‘கிஞ்சித் என்பணி’ என்ற செயலியின் (App) மூலம் பக்தி, ஆன்மிகம் தொடர்பான விஷயங்களை தினமும் 10–15 நிமிட ஒலிப்பதிவுகளாக பகிர்ந்து கொள்கிறார். உண்மையில் இதையொரு செயற்கரிய பணியாகவே பார்க்கிறேன். எப்படியென விளக்குகிறேன்.

எந்தவொரு விஷயமும் நம்மிடம் தினமும் தொடர்பிலிருப்பது, நம்மிடம் தினப்படி உரையாடுவதன் மூலமே நம்மிடம் ஆழப்பதியும். சுருங்கச் சொல்வதனால் ஒரு பழக்கமாக அது மாறாதவரை அது நம்மைப் பெரிதாகப் பாதிக்கப்போவதில்லை. இன்று பெரும்பாலான விஷயங்களில் (கல்வி, பயணம், வாசிப்பு) நமக்கு நாள்பட்ட பழக்கமிருப்பதில்லை. எனது யோகா ஆசிரியர் சொன்ன கவனிப்பு இது. “நடைபயில்பவர்களின் முதல் அரைமனி நேர நடை என்பது பெரிதாக மாற்றங்களை விளைவிப்பதில்லை, ஆனால் அடுத்த அரைமணி நேரமும் தொடர்ச்சியாக அவர்கள் நடைபயில்வதால்தான் பலன் கிடைக்கிறது, ஆனால் பெரும்பாலானவர்கள், அரைமணி நேரத்துடன் நடையை நிறுத்தி விடுகிறார்கள்”. அதாவது எந்தவொரு விஷயத்திலும் எப்போதோ நமக்கு கிடைக்கும் மிகப்பெரிய அனுபவம் நம்முள் நிகழ்த்தும் மாற்றத்தை விட அன்றாடப் பழக்கமாய் அது நம்முள் துளித்துளியாய் இறங்கிச் செல்லும் மாற்றமே நிலையானது. இதற்கு ‘என் பணி’ ஒலிப்பதிவுகள் பெரும்பங்காற்றுகிறது என்பதே என் துணிபு.

அத்தோடு ஆண்டுதோறும் வெளிடப்பெறும் thematic காலண்டர்கள் (இந்த வருட சுந்தரகாண்டம் நாட்காட்டிக்கு முன்பதிஞ்சாச்சா?), கிஞ்சித்காரம் டிரஸ்டில் உறுப்பினாராய் நாம் இணையும்போது காலாண்டுதோறும் கிடைக்கும் குறுந்தகடுகள் (சிடி) இவற்றின் மூலம் இதிகாச புராணங்களின் அறிமுகத்தை மெல்ல மெல்ல நம்முள் விதைக்கிறர். முக்கியமாக நம் குழந்தைகளுக்கு நிறைய புராணங்களின் எளிமையான வடிவமேனும் சிறு வயதிலேயே கிடைத்து விடுகிறது. பின்னாளில் அவர்கள் அதிலிருந்து மேலெழும்பக்கூடும் (உதாரணமாக ஜெயமோகனின் மகாபாரத மறு ஆக்கமான வெண்முரசின் வாசகர்களில் பலரும் பாரதத்தை அதன் எளிய வடிவிலேனும் கேள்விப்பட்டோ வாசித்தோ இருப்பவர்கள்). இப்படி நம்முள் பதியும் விஷயங்கள், வெறும் லௌகீகக்கணக்கு மட்டும் போட்டுக் கொண்டிருக்கும் எளிய வாழ்வின் போதாமையை நம்மை கவனிக்கக் கோருகின்றன.

அவர் மீது வைக்கப்படும் மிக முக்கியமான விமர்சனம் ‘அவர் வயதானவர்களுக்குத் தகுந்தாற்போல் அனைத்தையும் எளிமைப்படுத்திவிடுகிறார்’ என்பது. இது மிகவும் மேலேழுந்தவாரியான குற்றச்சாட்டு என்றே நினைக்கிறேன். நினைத்துப் பார்ப்போம், இன்று யார் உபன்யாசம் கேட்க வருகிறார்கள்? அப்படியும் இன்று பிரபலமாயிருக்கும் வேறு சில உபன்யாசகர்களின் உரைகளைப் பார்த்தாலே ஜனரஞகம் என்ற பேரில் நாடகத்தனம் செய்யாத இவரது தனித்துவமும் மேன்மையும் நமக்குப் புலப்படும். மேலும் இவ்வாறு குற்றஞாட்டுபவர்கள் கீதை, உபநிஷதங்கள் போன்றவற்றைப் பற்றி இவர் வழங்கிய எத்துணையோ உரைகளைக் கேளாமல் வெறும் தொலைக்காட்சி உபன்யாசங்களைப் பற்றி மட்டும் குறைகூறுபவர்கள் என்றே சொல்வேன்.

அவர் தன் பாணியை மாற்றிக்கொண்டால் இளைஞர்கள் பெருமளவு வருவார்கள் என்ற வாதத்தை நான் நம்பத் தயாரில்லை. இன்றைய இளைஞர்கள் (பெருவாரியான பலர்) இது போன்ற விஷயங்களுக்குக் காது கொடுப்பதற்கு இன்னும் 10–15 வருடங்களாகும் என்பதே என் அனுமானம். எனில் அதுவரை அவர் தடாலடியான மாற்றங்களாக அல்லாமல் மெல்லமெல்லத்தான் தன் பாணியை மாற்றிக்கொள்வார் என்றே படுகிறது. தன் எல்லைக்குட்பட்ட (உபன்யாசம் அல்லாத) வேறு விஷயங்களை அவர் முயன்று கொண்டுதானிருக்கிறார் (2016இல் பலதரப்பட்ட சதித்தலைவர்களை அழைத்துப் பேசி வேற்றுமைகளைக் களைந்து ஒன்றுபடுவதற்கு முயல்வது உட்பட பல செயல்களை சத்தமில்லாமல் செய்து கொண்டுதானிருக்கிறார்).

அவரது உபன்யாசங்களின் வெற்றி என்பது அதைக் கேட்கும் நாம் ஒவ்வொருவரும் ‘வேலையும் வசதிவாய்ப்பும் மட்டும்தான் முக்கியம்; மற்றவையெல்லாம் அப்புறம்’ என்ற மனோநிலையை மாற்றிக்கொண்டு வேலையும் சம்பளமும் எவ்வளவு முக்கியமோ அதேயளவு சத் விஷயஙளுக்கு காது கொடுத்து நம் குழந்தைகளுக்கு அதன் ருசியை சிறுவயதிலேயே காட்டி விடுவதும் முக்கியம் என்பதை உணர்ந்து ‘சமகாலத்தில் வேண்டுமானால் வேலை முக்கியமானதாயிருக்கலாம்; ஆனால் நம் அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்லும் மிகப்பெரிய சொத்தென்பது ஐயாயிரம் வருட நம் மரபும் அதன் பொக்கிஷங்களான இதிகாச புராணங்களான இன்னபிறவும்தான்; அதற்காக கிஞ்சித்தாவது அனுதினமும் அடியெடுத்து வைத்து, நம் அடுத்த சந்ததியினருக்கு அதன் ருசியைக் காட்டுவதுதான்’ என்று உணர்ந்து செயல்படுவதுதான்.

படம் : நன்றி தென்றல் தமிழ் மாத இதழ்.

தொகுப்புகள்:
Kinchit En Pani App:
Android / iOs (Ipad/Iphone)
Kinchit Yuvavikas: Ipad/Iphone / Android
Archives of the above: (1–850 in Kichit website)
Youtube: (Thanks a ton to Adiyen Ramanujadhasan)

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் : (Audio) (இது ஒரு அருமையான தொகுப்பு. திருக்கோளூருக்குச் செல்லும் ராமானுஜர் அந்த ஊரிலிருந்து வெளியே வரும் பெண் ஒருவரிடம் ‘நினைத்தாலே முக்தி தரும் இவ்வூரை விட்டு ஏன் வெளியேறுகிறாய் எனக்கேட்க நான் இன்னின்னாரைப் போல இன்னினது செய்தேனா என்று 81 வார்த்தைகள் கேட்கிறார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சரித்திரம்.)

His interviews
Free downloads in Vedics.org
His primary website
Twitter / Facebook
Archives of enPani: https://www.kinchit.org/kinchit-en-pani/ | His past enpani discourses in YouTube: https://www.youtube.com/channel/UCELEgaFullWSr3BdtZ4mUDw/playlists

Velukkudi Krishnan’s Web TV Channel: https://velukkudi.tv/stream/free/

தொடரின் முந்தைய இடுகைகள்:
http://bit.ly/42things1 முதல் நாள் இன்று: ஜெயமோகனின் நகைச்சுவைக் கட்டுரைகள்)
http://bit.ly/42things2 சுகானுபவம் (சுகாவின் எழுத்துத் தொகுப்பு)
http://bit.ly/42things3 This is Seth Godin
http://bit.ly/42things4 வியப்பளிக்கும் ஆளுமை வெங்கட்சாமிநாதன்
http://bit.ly/42things5 பணிவன்புடன்… (அரவிந்தன் நீலகண்டன்)
http://bit.ly/42things6 ஹரியண்ணா
http://bit.ly/42things7 : குவியத்தின் எதிரிகள் (கஸ்தூரி சுதாகர்)
http://bit.ly/42things8 ஒத்திசைவு ராமசாமி
http://bit.ly/42things9 கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார்

--

--

No responses yet